கட்டுரைகள்

சாதிய வல்லுறவுகள் நிறுவனமயப்பட்டக் குற்றம்; அதை எழுத மறுப்பது ஒழுங்கமைக்கப்பட்ட வரலாற்று சதி

எந்தவொரு சாதாரண நிகழ்வும் செய்தியாகும் தகுதியை இழக்கிறது. இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது ஒரு சாதாரண நிகழ்வு. தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான அறிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடமும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதை அண்மையில் உறுதி செய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் சுமார் 88 பேர், அந்த ஆண்டு முழுக்க 32,033 பேர். ஆனால் ஓரிரு நிகழ்வுகள் தான் செய்தித் தகுதியைப் பெறுகின்றன. இந்திய ஊடகங்கள் மிகப் பிரபலமான ஓர் இதழியல் பழமொழியைக் கொண்டு தம்மை நியாயப்படுத்திக் கொள்ளக் கூடும். அது, ’’நாய் மனிதனை கடிப்பது ஒருபோதும் செய்தியாகாது, ஏனெனில் அது அடிக்கடி நடக்கும் நிகழ்வு. மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தியாகும்’’.இந்த விளக்கப்படி பார்த்தால் வல்லுறவுகளுக்கு செய்தியாகும் தகுதியே இந்தியாவில் இல்லை. ஏனென்றால் நாய்க்கடிக்கு (ஆண்டுக்கு சுமார் 50,000 பேர்) இணையாக இங்கே வல்லுறவுகள் நடந்தேறுகின்றன. இந்த வேதனையான ஒப்பீட்டை நகைச்சுவை என்று நினைத்து விட வேண்டாம்.

இந்திய ஊடகங்கள் சில வல்லுறவு நிகழ்வுகளை சுரணையின்றி பரபரப்பான செய்தியாக்குவதற்கும் பலவற்றை கள்ள மவுனத்தோடு கடந்து போவதற்கும் மிக வலுவான சமூகக் காரணங்கள் உள்ளன. பாதிக்கப்படுவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த, நகர்ப்புற, படித்த, வெள்ளைநிறப் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இவை பரபரப்பை அணிந்து கொள்கின்றன. அதுவே கிராமப்புற, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கறுப்பு நிற பெண் என்றால் அவை மவுனத்தை அணிந்து கொள்கின்றன. இந்துமதத்தின்படி இந்தியர்கள் தீண்டத்தகாதோர் – தீண்டத்தகுந்தோர் என பல நூற்றாண்டு காலமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளதைப் போலவே பாலியல் வல்லுறவுகளையும் தீண்டத்தகுந்த ஆதிக்க சாதி பெண்கள் மீதானவை மற்றும் தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதானவை என கூர்மையாக வகைப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இங்கே நிறைந்துள்ளன. பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இப்படி பிரித்துப் பார்க்கலாமா எனில் ஒடுக்கப்பட்டப் பெண்கள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களாலும் ஒடுக்கப்படும் சமூகத்தில் அதுதான் நியாயமாகிறது. சாதியமைப்பின் எல்லா பிரிவு பெண்களும் சமமானவர்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அவற்றுக்குக் கிடைக்கும் நீதியும் சமத்துவமானதாக இருக்க முடியாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிர்பயாவுக்கு நேர்ந்தது கொடூரத்தின் உச்சம்தான், யாராலும் அதை மறுக்க முடியாது. ஆனால் அது அதற்கு முன்னர் நடக்காத கொடுமை அல்ல. 2006 ஆம் ஆண்டு கயர்லாஞ்சி பாலியல் படுகொலைக்கு பலியான தாய் மகளான சுரேகா மற்றும் பிரியங்கா ஊரிலுள்ள அத்தனை ஆதிக்க சாதி ஆண்களாலும் இதை விடவும் கொடூரமான வகையில் வதையை அனுபவித்தனர். ஆனால், நிர்பயாவுக்காக உயிரைக் கொடுத்து போராடி, குற்றவாளிகள் மரண தண்டனை பெறுவதை உறுதி செய்த அதே ஊடகங்கள் கயர்லாஞ்சி படுகொலை ஒரு மாதம் கழித்துதான் செய்தியாக்கின. அதற்கு ஆதாரங்கள் அழிக்கப்பட்டு, சாட்சிகள் கலைக்கப்பட்டு, வழக்கு முழுமையாகத் திரிக்கப்பட்டது. டெல்லிக் குற்றத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

பாதிக்கப்படுவது தலித் பெண்களாக இருந்தால் இதில் ஒரு சதவீத ஆர்வத்தைக் கூட ஊடகங்கள் செலுத்துவதில்லை. இந்த பாரபட்சம் ஆதிக்க சாதியினருக்கு அசாத்திய துணிச்சலை அளிக்கிறது. அதாவது, ’’நாம் தலித் பெண்கள் பலாத்காரம் செய்தால் இந்த ஒட்டுமொத்த தேசமும் ஆதரவளித்து நம்மை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கை வைத்துவிடும்’’ என அவர்கள் ஊக்கம் பெறுகின்றனர். தலித் பெண்கள் ஒருபோதும் இந்தியாவின் மகள்களாக முடியாது என்பதற்கான நிகழ்கால ஆதாரம் வேண்டுமா? ஹாத்ராஸ் குடும்பத்தினர் படும்பாட்டைப் பாருங்கள்.

இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு வன்புணர்ச்சி போன்ற சமூகக் குற்றங்களின் சமூகக் காரணங்களை ஆராய மறுக்கின்றன. ஒரு திருட்டைப் போலவோ வாகன விபத்தைப் போலவோதான் பொதுவாக பெண்கள் மீதான வன்முறைகளையும் அவை அணுகுகின்றன. பாலியல் வெறிக்காக நிகழ்த்தப்படும் பலாத்காரங்களை விட இந்நாட்டில் ஆண் தனது பாலின மேலாதிக்கத்தையோ சாதி அதிகாரத்தையோ நிறுவுவதற்காக அரங்கேற்றும் பலாத்காரங்களே அதிகம். முன்னது தனிநபர் குற்றம், பின்னது சமூகக் குற்றம். வன்முறை என்பது தனிநபர் குற்றம் வன்கொடுமை என்பது சமூகக் குற்றம். இந்த வேறுபாடுகள் ஊடகவியலாளர்களுக்கு புரிவதில்லை. அவர்கள் எல்லா குற்றங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கின்றனர். பெண்களும் கூட பாலியல் வன்புணர்ச்சியும் தலித் பெண்கள் எதிர்கொள்ளும் சாதிய வன்புணர்ச்சியும் ஒன்றெனவே கருதுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

ஆதிக்க சாதிப் பெண்கள் ’பெண்’ என்பதற்காக பலாத்காரம் செய்யப்படும்போது ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் ’தலித்’ என்பதற்காகவே சிதைக்கப்படுகின்றனர். முன்னதை சூழலும் பின்னதை பிறப்பும் தீர்மானிக்கிறது. ஒரு பார்ப்பனப் பெண்ணோ பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரோ ஒருபோதும் அவர் சார்ந்த சாதிக்காக பலாத்காரம் செய்யப்படுவதில்லை. அக்கொடுமை தலித் பெண்களுக்கு மட்டுமே நடக்கிறது. போர்ச்சூழல்களில் எதிரி நாட்டு பெண் என்பதே பலாத்காரம் செய்ய போதுமானக் காரணமாக ராணுவ வீரர்கள் கருதுவதைப் போலவே ஆதிக்க சாதி ஆண்கள் தம் சக குடிமக்களான தலித் பெண்கள் மீது அழித்தொழிக்கும் போர் வன்முறையை ஏவுகின்றனர். ஹாத்ராஸ் பெண் சிதைக்கப்பட்ட விதத்தைப் பாருங்கள் – அதை பாலியல் வன்முறை என்று மட்டும் நாம் அழைக்க முடியுமா? அவளது ஒவ்வொரு அங்கமும் குதறியெடுக்கப்பட்டது. ஆதிக்கசாதி குற்றவாளிகளுக்கு தமது பாலியல் வெறியை ஆற்றிக் கொள்வது மட்டும் இதன் நோக்கமல்ல. தாழ்த்தப்பட்ட மக்களின் மூளைகளில் அச்சம் மற்றும் அடிமைத்தனத்தின் விதையை மீண்டும் மீண்டும் ஊன்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. இப்படுபாதக செயலால் தமக்கு ஒரு பாதிப்பும் வராது என்பதுவும் அவர்களுக்குத் தெரியும்.

இந்திய கிராமங்களின் சேரிப் பகுதியில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையும் எந்த வயதிலும் தாம் வன்புணரப்படும் ஆபத்தை தாங்கியே வளர்கிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்து தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்படுவதாகக் குறிப்பிடும் தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கையை பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. ஆனால், நாளொன்றுக்கு 10 பேர் வன்புணரப்படுகின்றனர் எனில் அவை அனைத்தும் ஒவ்வொரு நாளும் ஏன் தலைப்புச் செய்தியாவதில்லை? ஆண்டுதோறும், ஒவ்வொரு பத்தாண்டிலும் சாதிய வன்புணர்ச்சிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் ஊடகங்கள் எண்ணிக்கைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் கொடூரங்களை ரத்தமும் சதையுமாக அம்பலப்படுத்த விரும்புவதில்லை. உண்மையில் சாதிய வன்புணர்ச்சிகள் எப்படியெல்லாம் நிகழ்த்தப்படக் கூடும் என்பது குறித்து யாருக்கேனும் புரிதல் இருக்கிறதா? நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது.

இதற்கு ஓர் அதிர்ச்சிகரமான உதாரணம் சொல்ல வேண்டுமானால், கடந்த 2016 ஆம் ஆண்டு அல்ஜசீரா வெளியிட்ட பலாத்கார வீடியோ பற்றிய செய்தியை குறிப்பிடலாம். உத்திரப் பிரதேச மாநிலம் முழுக்க பரவலாக இந்த வீடியோக்கள் ரூ.20 – 200 வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த வீடியோக்கள் அதிகளவில் உலா வருகின்றன. உள்ளூர் பெண்கள், ஆண்களால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படும் கொடூரக் காட்சியை குற்றவாளிகள் செல்போனில் படம் பிடிக்கின்றனர். பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் முகம், கதறல் எதுவும் மறைக்கப்படுவதில்லை. பார்ப்பவர்களுக்கு நிஜ பலாத்கார அனுபவத்தை இவை தருகின்றன. வெளிநபர்கள் இந்த வீடியோக்களை வாங்க முடியாது.’’வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’’ என மிரட்டப்படுவதால் இதில் பாதிக்கப்படும் பெண்கள் புகாரளிக்கவோ பெற்றோரிடம் கூறவோ கூடத் துணிவதில்லை. அந்த வீடியோவில் இடம் பெறும் பெண்களின் சமூகப் பின்னணி குறித்து அக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும்சாதி அமைப்பின் கொடூரத்தை உணர்ந்தவர்களால் உறுதியாக சொல்ல முடியும், அப்பெண்கள் ஆதிக்க சாதி குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவே முடியாது என! ஒருவேளை பலாத்கார வீடியோக்களில் இடம் பெறும் பெண்கள் ஆதிக்க சாதியினராக இருந்திருந்தால் அல்ஜசீரா செய்தி இச்சமூகத்தில் பெரிய பிரளயத்தையே உண்டாக்கியிருக்கும். ஊடகங்கள் உறங்காமல் அப்பகுதிகளில் முகாமிட்டிருக்கும். இந்த பலாத்கார வீடியோக்கள் பணத்திற்காக மட்டும் தயாரிக்கப்படுவதில்லை என்பதை அவற்றில் விலையை வைத்து புரிந்து கொள்ளலாம். உள்ளூரில் தமது சாதி ஆதிக்கத்தை நிறுவ நினைக்கும் ஆண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தொடுக்கும் தொழில்நுட்பரீதியான வன்கொடுமை இது. வீடியோவை வைத்து பாதிக்கப்பட்டப் பெண்கள் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யப்படுவதற்கான ஆபத்தும் இதில் ஒளிந்திருக்கிறது. என்றோ பரபரப்பாகும் ஒற்றை நிகழ்வுகளை விடுத்து இப்படியான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வெளிக் கொணர்வதில் இந்திய ஊடகங்களுக்கு துளியும் அக்கறை இல்லை.

இந்நாட்டின் உண்மையான சமூகப் பிரச்னைகளில் இருந்து விலகி சுஷாந்த் சிங் தற்கொலை போன்ற பரபரப்பு செய்திகளுக்கு தான் அவை தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவிடுகின்றன. ஆதாரமற்ற, ஆய்வற்ற செய்திகளை, மிகைப்படுத்துதல்களோடும் கண்கவர் தலைப்புகளோடும் விற்பனைக்காக ஆபாசப் பரபரப்பில் ஈடுபடும் மஞ்சள் இதழியலால் இந்திய ஊடகங்கள் அரிக்கப்பட்டுள்ளதற்கு என்ன காரணம்? அதிகரிக்கும் பெண்கள் மற்றும் தலித் பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் ஏன் அவற்றுக்கு ஒரு பொருட்டாவதில்லை? ஏனெனில் தலித்துகளையும் பெண்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதும் பொது புத்தி. இந்திய ஊடகங்கள் என்பவை ஆதிக்க சாதி ஆண்களின் கூடாரம். தலித்துகள் அவற்றில் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவானதாக இருக்கிறது. ஊடகத்துறை எனும் ஆதிக்க வெளிக்குள் தலித் பெண்கள் இன்னும் காலடியே எடுத்து வைக்கவில்லை. இந்நிலையில் நேர்மையான, அறவுணர்வுடன் களப்பணி சார்ந்த இதழியல் பணியை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இதில் மிகவும் வேதனையான விஷயம் எதுவெனில் தம்மை யார் ஒடுக்குகிறார்களோ அவர்களே தம் மீதான ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி எழுதும் நிலையில் தலித்துகளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுவே, தம்முடைய பாடுகளை தாமே எடுத்துரைக்கும் வாய்ப்பை இச்சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் பெறவில்லை.

பலாத்காரம் குறித்த செய்திகளை பெரும்பாலும் ஆண்களே எழுதுகின்றனர். எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டுமென்பதில் அவர்களுக்கு இருக்கும் அறியாமையும் போதாமையும் அதோடு சேர்ந்த ஆண் மனநிலையையும் கண்டதையும் எழுத வைக்கிறது. ஊடகவியலாளர்கள் தமது புலனாய்வுத் திறனை பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை, அவளது நண்பர்களை, பழக்க வழக்கங்களை, வேலையை, திருமண நிலையை, பொழுது போக்குகளை, வல்லுறவுக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதுவதில் தான் வெளிப்படுத்துகின்றனர்; பாதிக்கப்பட்ட பெண் எப்படியெல்லாம் வன்புணரப்பட்டார் என்பதை வர்ணனை செய்து மீண்டும் மீண்டும் அப்பெண்ணை செய்திகளின் வழியே பலாத்காரம் செய்கின்றனர். பெண்களின் குரலாக ஆண்கள் இருப்பதில் இருக்கும் அதே சிக்கல் தலித் பெண்களின் குரலாக ஆதிக்க சாதி பெண்கள் இருப்பதிலும் வெளிப்படுகிறது. சாதியக் கொடுமைகள் பற்றிய புரிதலின்றி வெறும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக சாதிய வன்புணர்ச்சிகளை சுருக்கிப் பார்க்கும் தவறை பல பெண் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் இழைக்கின்றனர். ஹாத்ராஸ் கொடுமை சார்ந்து காட்சி ஊடகங்கள் நடத்தும் விவாதங்களில், எழுதும் கட்டுரைகளில் பரவலாக தலித் அல்லாதவர்களே இடம் பெறுகின்றனர். குறைந்தபட்சம் ஊடகங்கள் கருத்து கேட்பதிலாவது பிரதிநிதித்துவத்தைக் கடைபிடிக்கலாம்.

சாதிய வன்புணர்ச்சிகள் பெரும்பான்மையாக கிராமப்புறங்களில்தான் நடந்தேறுகின்றன. ஏனெனில் இந்திய மக்கள் தொகையில் 65% பேர் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றனர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக வசிக்கும் அங்கே தான் சாதிய முரண்கள் உச்சபட்சமாக நிலவுகின்றன. ஆனால், எத்தனை இந்திய ஊடகங்கள் இதை பற்றி எழுதியும் பேசியும் இருக்கின்றன? கிராமப்புற செய்தி சேகரிப்பு என்றாலே அது விவசாயத்தோடு தொடங்கி விவசாயத்தோடு முடிந்தும் போகிறது. யூதர்களுக்கு ஹிட்லர் உருவாக்கிய வதை முகாம்கள் மற்றும் விஷ வாயு அறைகளைப் போல இந்து சாதியமைப்பு கிராமங்களில் சேரிகளை உருவாக்கி வைத்திருப்பதை எந்த ஊடகமும் இதுவரை கண்டித்ததில்லை. 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஊர் சேரி பிரிவினையை கேள்விக்குட்படுத்திய ஒரேயொரு ஊடக நிறுவனம் கூட இல்லை. தீண்டாமைக்கும் வன்கொடுமைக்குமான அடிப்படை அதுதான். நகரங்களைப் போல ஒரு கிராமத்தில் யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் வசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவது, பொது வளங்களில் தலித்துகள் தமது உரிமையை பெறுவது, நூற்றுக்கணக்கான தீண்டாமை முறைகள் மற்றும் வன்கொடுமைகள் பற்றியெல்லாம் ஊடகங்கள் பேசுவதே இல்லை. மாறாக, கயர்லாஞ்சி, கதுவா, ஹாத்ராஸ் கொடுமைகள் போல ஏதாவது வெளியே தெரிந்தால் பெயருக்காக சில நாட்கள் அவற்றை செய்தியாக்கி, தாம் ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காக போராடுவதைப் போன்ற ஒரு மாயையை உருவாக்குகின்றன. உண்மையில், இந்திய ஊடகங்களின் செய்தியறைகளைப் போலவே செய்திகளிலும் தலித்துகளுக்கு இடமில்லை. ஆக்ஸ்பேம் இந்தியா மற்றும் நியூஸ் லாண்டரியின் ஆய்வின்படி 12 இதழ்களின் 972 முகப்புக் கட்டுரைகளை ஆய்வு செய்ததில் வெறும் 10 செய்திகள்தான் சாதித் தொடர்பானவை. நாள் தோறும் சாதிக் கொடுமை நடந்தேறும் ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஊடகத்துறை கள்ள மவுனத்தோடு கடந்து செல்வது வெட்கக்கேடு.

கிராமப்புற சாதியப் பண்பாட்டில் வன்புணர்ச்சி என்பது அன்றாடம் நிகழும் குற்றம். ஹாத்ராஸ் போன்ற கவனம் பெற்ற குற்றத்திலும் கூட சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று வாக்குமூலங்களை பெறுவதில்லை, ஆதாரங்களை திரட்டுவதில்லை, அதற்கு முன்னர் அதே போன்ற கொடுமைகள் நடந்துள்ளனவா என்பதை ஆராய்வதில்லை. மாறாக, மருத்துவமனை வாசலில் மரணச் செய்தியை வாசித்துவிட்டு தமது கடமையை அவை முடித்துக் கொள்கின்றன. ஆழமானப் புலனாய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையோ பின்தொடர் செய்தித் தொகுப்புகளையோ அவை வெளியிடுவதில்லை., ஒரு கிராமத்தில் ஒரு வன்புணர்ச்சிக் கொடுமை நடக்கிறதெனில் அங்கே அதற்கு முன்னர் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஒரு கிராமத்தில் எந்த வன்புணர்ச்சியும் புகார் செய்யப்படவில்லை என்றால் அங்கே நிகழும் வன்கொடுமைகள் சாதி அதிகாரத்தால் சாமர்த்தியமாக மூடி மறைக்கப்படுகின்றன என்றே அர்த்தம். தலித் மக்கள் மத்தியில் களப்பணி செய்வோர் அறிந்த விஷயம் இது. இந்தியாவின் எந்தவொரு கிராமத்திலும் தலித் பெண்கள் மீதான வன்புணர்ச்சி ஓர் ஒற்றை நிகழ்வாக இருக்க முடியாது, அதுவொரு தொடர் கண்ணி என்பதை உணர்த்த 1980களில் தமிழகத்தில் தென்கோடியில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டம் சங்கனாங்குளம் கிராமத்தில் நடந்த வல்லுறவுகளை இங்கே நினைவூட்டுவது சரியாக இருக்கும்.

200 ஆதிக்க சாதி குடும்பங்களும் 40 தலித் குடும்பங்களும் வசித்த சங்கனாங்குளத்தில் தாழ்த்தப்பட்டப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. 16 வயதான மஞ்சுளா தனது வீட்டில் தன் தம்பிகள் முன் வைத்து சிதைக்கப்பட்டார். கணவர் வேலை செய்யும் ஆதிக்க சாதிக்காரரின் தோட்டத்திற்கு உணவு கொண்டு சென்ற ராஜசெல்வம் பம்புசெட் அறைக்குள் வைத்து சீரழிக்கப்பட்டார். ஜெபமணி, வசந்தா, புஷ்பம், கிரேஸ், சொர்ணம், அந்தோணியம்மாள், வசந்தி, சாந்தா உள்ளிட்ட 17 பெண்கள் அக்கிராமத்தின் ஆதிக்க சாதி ஆண்களால் வல்லுறவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், ஆதிக்க சாதியினரால் கடுமையாக மிரட்டப்பட்டதால் யாரும் யாரோடும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்து கொள்ளவில்லை. எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக ஒரு கட்டத்தில் இவ்விஷயம் வெளியே பரவத் தொடங்கியது. அப்பகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜான் வின்செண்ட் சங்கனாங்குளத்திற்கு நேரில் சென்று விசாரிக்க மொத்தம் 17 பெண்கள் தாங்கள் வன்புணரப்பட்டதாக புகாரளித்தனர். அதன் பின்னர் இப்பிரச்னை ஊடகங்களில் செய்தியாகி அரசியல் பரபரப்பை உண்டாக்கியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை இந்த பெண்கள் சந்தித்து மனு கொடுத்தனர். அதை தொடர்ந்து காங்கிரஸ் அரசு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் ஓர் உண்மை அறியும் குழுவை அனுப்பி வைத்தது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததோடு நடந்த குற்றங்களுக்கு கிராம அதிகாரிகள் துணை போனதால், தமிழகம் முழுவதும் கிராம அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு அந்த பதவியே ஒழிக்கப்பட்டது (பின்னர் கிராம நிர்வாக அதிகாரி என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது). ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டப் பெண்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்ததால் அவர்கள் முற்றிலுமாக தமது வாழ்வையும் நிம்மதியையும் இழந்தனர். சுதந்திரமாக வலம் வரும் குற்றவாளிகளை பார்த்துக் கொண்டு வாழ முடியாததாலும் தவறானப் பேச்சுக்களை தாங்க முடியாததாலும் சங்கனாங்குளம் தலித்துகள் சிறிது சிறிதாக ஊரை விட்டு வெளியேறினர். சங்கனாங்குளம் இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களிலும் தலித் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் கொடூரங்களுக்கான வெளிவந்த உறுதியான ஆதாரம்.

தலித் பெற்றோர்கள் உயிர் பயம், பெண்ணின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெரும்பாலும் அக்கொடூரத்தை தமக்குள் பதுக்கிக் கொள்கின்றனர். நிராதரவான சேரிவாசிகளாக இருந்து கொண்டு அரசியல் பலம் நிறைந்த ஆதிக்கசாதியினர் அவர்களின் ஊர் பஞ்சாயத்துகள், காவல்நிலையங்கள், அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் இவற்றை எல்லாம் கடந்து தலித் பெண்கள் நீதிக்கான போராட்டத்தை நடத்துவதென்பது தமது தலைக்கு தாமே தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதற்கு சமம்! அதனால், பல வன்புணர்ச்சிகள் அழுகையாலும் கண்ணீராலும் கரைத்துக் கொள்ளப்படுகின்றன. அர்ப்பணிப்பும் அறவுணர்வும் கொண்ட ஊடகப் பணியால் கிராமப்புற சாதிக் கொடுமைகளை நாள்தோறும் தலைப்புச் செய்திகளாக்க முடியும். ஆனால், சுதந்திர இந்தியாவில் எந்த மைய நீரோட்ட ஊடகமும் அப்படியான பொறுப்புணர்வை தனது கடமையாக்கிக் கொள்ளவில்லை.

’’எங்களுடைய கருத்துக்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. எங்களுக்கு பத்திரிகையே இல்லை. இந்தியா முழுவதும் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையால் ஒவ்வொரு நாளும் எம்மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஊடகங்களில் வெளிவருவதே இல்லை. சமூகம் மற்றும் அரசியல் குறித்த எங்கள் கேள்விகளை, ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சதியால் ஊடகங்கள் திட்டமிட்டு ஒடுக்குகின்றன’’ என ஊடகங்களின் நிலை குறித்து 70 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். அந்நிலை இன்றளவிலும் மாறவில்லை. ஒரு சாதி சங்கத்தைப் போல இயங்குவது, ஜனநாயத்தின் மிக உயர்வான நிறுவனமான ஊடகத்துறைக்கு அது கேவலமில்லையா? ஜனநாயகத்தில் பிற அமைப்புகள் தவறிழைத்தால் தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களே சாதியை விழுங்கிக் கொண்டு பாகுபாடுகளை கடைபிடிக்கும் போது இந்நாட்டின் குரலற்றவர்களுக்கு ஏது போக்கிடம்? உங்களுக்கான ஊடகங்களை நீங்களே நடத்திக் கொள்ள வேண்டியதுதானே என நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்வி.

இந்நாட்டில் ஒவ்வொரு சாதியும் தம் பாடுகளையும் தமக்கான நியாயங்களையும் எடுத்துரைக்க தனக்கான ஊடகங்களை தானே நடத்திக் கொள்ள வேண்டுமா, என்ன? ஊடகங்களைப் போலவே ஒவ்வொரு சாதியும் தமக்கான நீதிமன்றங்களையும், நாடாளுமன்றங்களையும் கூட தாமே உருவாக்கிக் கொள்ளலாமா? ஒவ்வொரு சாதியினரும் யாரோடும் சேராமல் தனித்தியங்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த கொடுமைதான் மனுவாதமாகிறது. அப்புறம் என்ன இது ஒரு தேசம், அதற்கொரு அரசமைப்பு? இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் பொது என்ற தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் நம்புகின்றனர். பன்னெடுங்காலமாக அவர்கள் காத்திருப்பதும் போராடுவதும் சமூகக் கலப்பு என சம வாழ்வை எதிர்பார்த்துதான். பல நூற்றாண்டு காலத் தனிமைப்படுத்துதல் தான் அவர்களது பெருந்துயரம்.

’’நீ படி, முன்னேறு, திருமணம் செய்து கொள், தொழில் தொடங்கு, உனக்கான உரிமைக்கு குரல் கொடு, உனக்கான செய்திகளை நீயே எழுதிக் கொள், உனக்கானத் திரைப்படங்களை நீயே இயக்கு, ஆனால் எல்லாமே உன் சாதி எல்லைக்குள் இருக்கட்டும்’’ என்பதாக ஒடுக்கப்பட்டோர் தம் போராட்டத்தல் பெற்ற அத்தனை வெற்றிகளையும் தனிமைப்படுத்துகிறது சாதிவயப்பட்டப் பொதுச் சமூகம். இத்தேசத்தின் பிற பிரிவினருக்கு எது பொதுவோ அதில் அவர்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வேண்டும். வாழுமிடத்திலும் கல்வியிலும் பணியிடங்களிலும் வாழும் முறையிலும் அதிகாரத்திலும் அவர்களை இச்சமூகத்தோடு இரண்டற கலந்திருக்க வேண்டும். அப்படியான சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கானப் பணிகளை செய்ய வேண்டியதுதான் ஊடகங்களின் கடமை. ஆனால், ஊடகங்கள் சமநீதித் தத்துவத்தின் அடிப்படையை முழுமையாக புறந்தள்ளுகின்றன. சாதியால் அரிக்கப்பட்ட சமூகத்தை சீர் செய்ய வேண்டுமானால் முதலில் அவை தம்மை ஜனநாயகத்தால் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லோருக்குமானவையாக இருக்கும் போது அது ஒடுக்கப்பட்டவர்களுக்கானதாகவும் ஆக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அவை செய்தியறைகளிலும் செய்திகளிலும் பிரதிநிதித்துவத்தை நிறைவேற்ற வேண்டும். ஊடகங்கள் தமது சாதிக் கறையை கழுவிக் கொள்ளாத வரை இங்கே நிகழும் அத்தனை சாதிய, சமூகக் குற்றங்களிலும் அதுவே முதன்மை குற்றவாளியாகிறது.

எழுதியவர் – ஜெயராணி அவர்களை பற்றி.

பதினெட்டு ஆண்டுகளாக பத்திரிகையாளராக பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறார்.சாதியம்,மதவாதம்,பெண்ணியம் மற்றும் விளிம்பு நிலை வாழ்வை உள்ளடக்கிய சமூக அரசியல் கட்டுரைகளை மய்ய நீரோட்ட இதழ்களிலும் மாற்று ஊடகங்களிலும் எழுதி வருகிறார். WIRE,OUTLOOK,NATIONAL HERALD,NEWSMINUTE உள்ளிட்ட ஆங்கில இணையதள பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். ஜாதியற்றவளின் குரல் (2014),உங்கள் மனிதம் ஜாதியற்றதா? (2018), உங்கள் குழந்தை யாருடையது (2019),எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை(2020) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மஞ்சள் நாடகத்தின் கதை ஆசிரியர் ஆவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சீனாவின் சிம்மசொப்பனம்

Vandhana

சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்

G SaravanaKumar

”மீண்டும் தங்கப் பறவையாக ஜொலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை”

Web Editor

Leave a Reply