கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கான நடைமுறை ஒத்திகை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பூசி பயன்பாட்டை விரைவாக விரிவுபடுத்துவது அவசியமாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி நடைமுறைகளுக்கான ஒத்திகை இன்று நடத்தப்படுகிறது. தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பஞ்சாப், அசாம், ஆந்திரபிரதேசம், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒத்திகை நடத்தப்படுகிறது. பொதுமக்களின்தகவல்களை பதிவேற்றம் செய்வது, தடுப்பூசியை எடுத்து வருவது, அதனை பயன்படுத்துவது, மருத்துவ கழிவுகள் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு ஒத்திகை அளிக்கப்படுகிறது. இதற்காக ஏராளமானோருக்கு பயிற்சி அளிக்கவிருக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரித்துள்ளன. இதனை நம் நாட்டில் பரிசோதனை செய்வதற்கான பொறுப்பை புனேவின் சீரம் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த மருந்துக்கான அவசர கால பயன்பாட்டுக்கு அடுத்த மாதம் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.