கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி மாநில அரசுகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குஜராத் மாநிலத்தில் உள்ள 328 மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீயணைப்பு துறையிடமிருந்து தடையின்மை சான்றிதழை பெறாத மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறிய அவர், கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தேவைப்படுவதாகவும் எடுத்துக் கூறினார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியது. மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிப்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார்.