கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்த நிவாரணம் வழங்க வேண்டும், இறந்தவரின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனுமீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால், கொரானாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பொதுநல வழக்குகள் விளம்பர நோக்கத்துடன் தொடர்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவற்றில் நீதிமன்ற தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதையேதான், தாங்கள் விரும்புவதாக குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.