கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரனிடம் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்த ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தரும் மாநில அரசின் ‘லைஃப் மிஷன் திட்டத்தில் ஊழல் மற்றும் சட்ட விதிமீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்திட்டத்தில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கரின் சார்பில் ரூ.1 கோடி கமிஷன் பெற்றதாக, தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு வீட்டுவசதி திட்ட வழக்கில் எம்.சிவசங்கரை அமலாக்கத் துறை அண்மையில் கைது செய்தது. மேலும், திட்டத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி யு.வி.ஜோஸிடம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதல்வரின் தனிச் செயலாளர் சி.எம்.ரவீந்திரன் நேற்று ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அவர் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.