குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயாணன் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிச.26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கடந்த 5 மாதமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி முறையாக கையாளவில்லை எனவும் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது.
இந்த பொது நலவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. சத்திய நாராயணன் தலைமையிலான ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் இன்று வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த பழைய நீர் தேக்க தொட்டியையும் தமிழக அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோரிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.