கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட இழுபறிக்கு பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொட்டல்குளம் அருகில் உள்ள சுந்தராபுரம் கிராமத்தில் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்து உள்ளார். அவரது பெற்றோர் மற்றும் அவரது ஆறு வயது மகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அவர் குடும்பத்துடன் தேவாலயத்திற்கு சென்றபோது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து, பீரோவில் இருந்த 57 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொள்ளை நடந்த வீடு அமைந்திருப்பது எந்த காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது என்பது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணையை தொடங்குவதில் நீண்ட இழுபறி நடந்துள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.