டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-ஆவது ஐபிஎல் தொடர், கடந்த 2 மாதங்களாக அமீரகத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்கு இடையே நடைபெற்ற இத்தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமின்றி மேலும் கூடுதலாக இரண்டு அணிகளை அடுத்து வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பது தொடர்பாக வரும் 24 ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படும் புதிய அணிகளை வாங்க அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஜி (ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் உரிமையாளர்கள்) அர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அகமதாபாத்தில் இருந்து ஒரு அணி ஐபிஎல் தொடரில் நுழைவது உறுதி எனவும் கான்பூர், லக்னோ அல்லது புனேவைச் சேர்ந்த ஏதாவது ஒரு அணி ஐபிஎல் இல் 10 வது அணியாக இடம்பெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவின் ஐ.சி.சி பிரதிநிதி மற்றும் மூன்று புதிய தேசிய தேர்வாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாகவும் இந்த வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.