உத்திரமேரூர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க புதையல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலை புனரமைக்க பலதரப்பட்டவர்களிடம் நிதி வசூல் செய்து, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. புனரமைக்கும் பணியின் போது கோயிலின் நிலைவாசல் கதவு இடையே தங்க புதையல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த புதையல் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், கோயில் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என ஊர் மக்கள் முடிவு செய்ததாகத் தெரிகிறது. தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் புதையலை பறிமுதல் செய்ய முயன்றனர்.
அதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தங்க புதையலை, புதிதாக கட்டப்படும் கோயிலில் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை வருவாய் கோட்டாட்சியர் ஏற்கவில்லை. பூமியில் கிடைத்த புதையலை சட்டப்படி அரசிடம் வழங்க வேண்டும் என்றும், தங்கத்தை ஒப்படைக்காவிட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தங்க புதையலை அரசிடம் ஒப்படைக்க பொதுமக்கள் சம்மதம் தெரித்தனர். ஊர் பெரியவர்கள் சம்மதத்துடன் உத்தரமேரூர் தாசில்தார் அலுவலக கருவூலத்தில் புதையல் ஒப்படைக்கப்பட்டது.