இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள், இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இலங்கை தமிழர்களுக்கு ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி” என்ற பெயரில், “வி சப்போர்ட்” என்ற அமைப்பு சார்பில், டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அவர்களது நிலம் மீண்டும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் வலியுறுத்தினார். இதற்காக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் குறித்து, ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஈழம் என்ற ஒன்று அழிக்கப்பட்டது ஒரு போர்குற்றமாக பார்க்கக்கூடாது எனவும், மாறாக அதனை திட்டமிட்டு நடத்தப்பட்ட இனபடுகொலை என்றே கருதி, அதற்காக ஐ.நா.வில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் , இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், இதற்காக தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், தமிழர்களுக்காவும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும், ஈழ தமிழர்களுக்காவும் காங்கிரஸ் கட்சிதான் அதிக நன்மை செய்துள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்டபோது, 13வது சட்டத்திருத்தம் குறித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது, எனவும் குறிப்பிட்டார்.
நிறைவாக பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி-களும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார். இலங்கை தமிழர்களுக்கு ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி, என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழக எம்பிக்கள் அனைவரும், இலங்கை விவகாரம் தொடர்பாக, ஐநா சபையில் இந்தியா முதலில் குரல் எழுப்ப வேண்டும், என்பதை வலியுறுத்தி ஒருமித்த குரலில் பேசினர், என்பது குறிப்பிடதக்கது.