இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது. 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 389 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள் குவித்தார். வார்னர் 83 ரன்களும், லபுஷெனே 70 ரன்களும் எடுத்தனர். முகமது சமி, பும்ரா, பாண்ட்யா ஆகியோர், தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 30 ரன்னிலும், மயங்க் அகர்வால் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி – கே.எல்.ராகுல் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 89 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து, அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 76 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-ல் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.