இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தற்போது வரை உயர்ந்து கொண்டே இருக்கின்றன. பொருளாதாரமும் இதுவரை இல்லாத அளவாக கடும் சரிவை சந்தித்தது. அதில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் சூழலில், மீண்டும் ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த இந்த புதிய கொரோனா வைரஸ் வேறு சில நாடுகளுக்கும் வேகமாக பரவியது. அந்நாட்டில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் தடம் பதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த 6 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 3 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள், 2 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் புனேவை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் தனியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நவம்பர் 25-ல் இருந்து டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவு வரை 33,000 பேர் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.