குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை அடுத்த ஈச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அவர் வேலைபார்க்கும் பள்ளியில் எப்படியாவது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், என்ற நோக்கத்தில் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார். இதற்காக தினந்தோறும், ஈச்சம்பட்டி கிராமத்தில் வீதி, வீதியாக சென்று, தண்டோரா போட்டு, அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி வருகிறார், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கிராம மக்கள், அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதால், கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து, தெளிவாக எடுத்துரைத்து வருகிறார். அடுத்த ஓராண்டுக்குள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தனது பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றுவேன் என்றும், உறுதிபட கூறுகிறார் ராஜேந்திரன். தலைமையாசிரியரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு தங்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகவும், அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும், என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாவும் கூறுகின்றனர் கிராம மக்கள்.
பள்ளிக்கு வந்தோம், பாடம் நடத்தினோம், கடமை முடிந்தது என்று செல்லாமல், கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியும் வாழ்த்து தெரிவிக்கிறது.