அசுர பலத்துடன் உள்ள அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி மாபெரும் வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் பிரச்சார முதல் பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார். உயர்கல்வி செல்பவர்களின் விகிதத்தை 49 சதவீதமாக உயர்த்தியது அதிமுக அரசு தான் என்றும் அவர் கூறினார். தொழில்துறையில் ஏற்படுத்திய முன்னேற்றத்தின் மூலம் புதிதாக பத்தரை லட்சம் பேருக்கு அதிமுக அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
தோல்வி பயத்தில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊர் ஊராகச் சென்று அதிமுக அரசு மீது பொய் புகார்களை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, டெண்டர் ரத்து செய்யப்பட்டதுகூட தெரியாமல் ஊழல் புகார் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக குறிப்பிட்டார். அதிமுகவில்தான் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.