தமிழகம் Breaking News

“அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலு பெற்றதாக தெரிவித்தார். இந்தப் புதிய புயலுக்கு புரெவி என பெயரிட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும். கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும் புரெவி புயல் அடுத்து 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் இலங்கை கடற்பகுதியை கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு வர கூடும் எனவும் புவியரசன் கூறினார்.

இதன் காரணமாக, நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகன மழைபெய்யும் என தெரிவித்தார். அதேப்போல், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் கூறினார். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என கூறினார்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தரை காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கூறினார்.

தென்கிழக்கு வங்க கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால், அடுத்த 3 நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.

Advertisement:

Related posts

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்

Vandhana

’தி ஃபேமிலி மேன் 2’ தொடரை நீக்க வேண்டும்: அமேசானுக்கு சீமான் கடிதம்!

Halley karthi

டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை

Gayathri Venkatesan

Leave a Reply